ta.wikipedia.org

ஆன்றே மால்றோ - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Sun Jan 05 2031

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்றே மால்றோ

ஆன்றே மல்றோ ( André Malraux DSO 3 நவம்பர் 1901 - 23 நவம்பர் 1976) என்பவர் பிரெஞ்சு புதின எழுத்தாளர், கலை விமர்சகர் மற்றும் பிரெஞ்சு அமைச்சர் ஆவார்.[1] இவர் சார்லசு டி காலே ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் செய்தித் துறை அமைச்சராகவும், பின்னர் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் எழுதிய மனிதனின் விதி என்ற புதினத்திற்காக பிரிக்சு கொன்கோர்ட் என்ற பரிசு பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

ஆன்றே மால்றோ வசதியான குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவருடைய இளமைக் காலம் பற்றியும் கல்வி பற்றியும் விரிவாகத் தெரியவில்லை. ஆன்றே மால்றோ பாரிசில் பிறந்தார். தாயார், அத்தை, பாட்டி ஆகியோரின் கவனிப்பில் வளர்ந்தார். இவருடைய தந்தை தொழில் இழப்பினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இளமைக் காலம் முதல் நரம்பியல் தொடர்பான நோய் இருந்ததாகக் கருதப்படுகிறது.[2] 

தமது 21 ஆம் அகவையில் கேம்போடியாவில் உள்ள மேர் கோவிலைத் தேடி பிரான்சை விட்டுச் சென்றார். கேம்போடியா காடு வழியாகச் சென்று அந்தக் கோவிலை அடைந்து, ஒரு தொல்லியல் பொருளை எடுத்து வந்ததால் அரசு இவரைக் கைது செய்தது. சிறைப் படுத்தப்பட்டார்.[3] பிரெஞ்சு சிறை அதிகாரிகளின் அடக்கு முறை இவரை வெறுப்பு அடையச் செய்தது. குடியேற்ற நாடுகளுக்கு எதிராகவும் சமூக மாற்றத்திற்கு ஆதராகவும் ஒரு செய்தித் தாளைத் தொடங்கி எழுதத் தொடங்கினார். தென் கிழக்கு ஆசியாவில் இருந்தபோது இளம் அன்னம் குழு என்ற ஓர் அமைப்பை வழி நடத்தினார். சீனாவுக்குப் போய் அங்கு நடைபெற்ற புரட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.