ta.wikipedia.org

உ. இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா

  • ️Sun Jun 27 1943

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உ. இராதாகிருஷ்ணன்

பிறப்புஇராதாகிருஷ்ணன்
சூன் 27, 1943
இணுவில், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புசெப்டம்பர் 6, 2015 (அகவை 72)
நல்லூர் (யாழ்ப்பாணம்)
இருப்பிடம்யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுவயலின் கலைஞர்
சமயம்இந்து
பெற்றோர்உருத்திராபதி, தையலம்மாள்
பிள்ளைகள்சைந்தவி, ரகுகுலன்

உருத்திராபதி இராதாகிருஷ்ணன் (27 சூன் 1943 - 6 செப்டம்பர் 2015) இலங்கைத் தமிழ் கருநாடக வயலின் இசைக் கலைஞர் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

இராதாகிருஷ்ணன் யாழ்ப்பாணம் இணுவிலில் உருத்திராபதி, தையலம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தந்தை உருத்திராபதி நாதசுவரம், வயலின் இசைப்பதிலும் திறமை பெற்றவர். இராதாகிருஷ்ணனும் தந்தையிடமே வயலின் மீட்டக் கற்றுக் கொண்டார்.[1] பின்னர் தமிழ்நாடு சென்று பரூர் எம். எஸ். அனந்தராமன் என்பவரிடம் வயலினும், தஞ்சாவூர் எம். தியாகராஜனிடம் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டார்.[1]

யாழ்ப்பாணத்தில் மதுரை சோமு, சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, தஞ்சாவூர் டி. எம். தியாகராஜன், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோருக்கு வயலின் வாசித்தார்.[1] யாழ்ப்பாணத்தில் கண்ணன் இசைக்குழுவில் சேர்ந்து வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றினார். பின்னர் மிருதங்கக் கலைஞர் சிவபாதம், மெல்லிசைப் பாடகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து "சிவராதாகிருஷ்ணமூர்த்தி குழு" என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவை ஆரம்பித்தார்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரது தனியிசைக்கச்சேரிகள் இறுவட்டுகளாக "கானாமிருதம்" என்ற பெயரில் வெளிவந்துள்ளன.[1]

2015 செப்டம்பர் 6 அன்று மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்ற இசையரங்கில் இராதாகிருஷ்ணன் வயலின் வாசித்துக்கொண்டிருந்த வேளையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு காலமானார்.[2] இக்கச்சேரியில் அவரது மகள் சைந்தவி வயலினும், மகன் இரகுகுலன் மிருதங்கமும் வாசித்துக் கொண்டிருந்தனர். இராதாகிருஷ்ணனின் சகோதரர் சந்தானகிருஷ்ணனும் ஒரு புகழ் பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஆவார்.[1]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 லலீசன், ச. (12 செப்டம்பர் 2015). "வயலினை உயிராக நேசித்த இசைஞான திலகம்". வீரகேசரி.
  2. "வயலின் மேதை உ. இராதாகிருஷ்ணன் காலமானார்". தினகரன். 7 செப்டம்பர் 2015. Retrieved 12 செப்டம்பர் 2015. [தொடர்பிழந்த இணைப்பு]