ஜெய்சல்மேர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா
- ️Fri Sep 30 2011
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/Jaisalmer_in_Rajasthan_%28India%29.svg/400px-Jaisalmer_in_Rajasthan_%28India%29.svg.png)
ஜெய்சல்மேர் மாவட்டம் (Jaisalmer District), மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஜெய்சால்மர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் தார் பாலைவனத்தில் உள்ளது. இராஜஸ்தானில் மக்கள் தொகை குறைந்த மாவட்டங்களில், ஜெய்சல்மேர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.[1] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில், இம்மாவட்டப் பரப்புகளை ஜெய்சல்மேர் சமஸ்தானம் ஆட்சி செய்தது.
![](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/D%C3%A9sert-du-Thar.jpg/250px-D%C3%A9sert-du-Thar.jpg)
இராஜஸ்தான் மாநிலத்தில் பரப்பளவில் முதலிடத்திலும்; அனைத்திந்திய அளவில் மூன்றாவது பெரிய மாவட்டம் ஜெய்சல்மேர் மாவட்டமாகும். இராஜஸ்தான் மாநில தார் பாலைவனத்தில் அமைந்த ஜோத்பூர் மாவட்டம், பிகானேர் மாவட்டம், பார்மேர் மாவட்டங்களில் ஜெய்சல்மேரும் ஒன்றாகும். ஜெய்சல்மேர் மாவட்டத்தின் மேற்கில் பாகிஸ்தான், வடகிழக்கில் பிகானேர் மாவட்டம், கிழக்கில் ஜோத்பூர் மாவட்டம், தெற்கில் பார்மேர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
464 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-பாகிஸ்தான் நாட்டுச் சர்தேச எல்லை இம்மாவட்டத்தில் உள்ளது. ஜெய்சல்மேர் மாவட்டம் முழுவதும் மணல் பாலைநிலமாக உள்ளது. 28 கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே பாயக்கூடிய கக்னி (Kakni) என்ற ஆறும், ஓர்ச்சில் அல்லது புஜ்-ஜில் எனும் ஏரியும் உள்ளது. ஆண்டு முழுவதும் வறண்ட வானிலை கொண்ட மாவட்டமாகும். இங்கு மழைக்கால பயிர்களான பார்லி, வறட்சியை தாங்கும்; நீர் தேவை குறைந்த கம்பு, சோளம், வரகு போன்ற சிறுதாணியங்களைப் பயிரிடுகின்றனர்.
ஜெய்சல்மேர் மாவட்டம் ஜெய்சல்மேர், பொக்ரான் மற்றும் பதேகாட் என மூன்று வருவாய் வட்டங்களும்; ஜெய்சல்மேர், பொக்ரான் என இரண்டு நகராட்சி மன்றங்களும்; ஜெய்சல்மேர், சாம், சங்கரா என மூன்று ஊராட்சி ஒன்றியங்களும்; 128 ஊராட்சி மன்றங்களும்; 744 கிராமங்களும் கொண்டுள்ளது.
இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக ஜெய்சால்மேர் மாவட்டத்தை 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊராக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதியுதவி வழங்குகிறது.[2]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 669,919 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 86.71% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 13.29% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 31.81% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 361,708 ஆண்களும்; 308,211 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 852 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 38,401 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 57.22% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.04% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 39.71% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 130,463 ஆக உள்ளது. [3]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 497,045 (74.19 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 1,521 (0.23 %)ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 1,723 (0.26 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 168,129 (25.10 %) ஆகவும்; கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
தார் பாலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஏறத்தாழ 2,76,887 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளில் ஒரு இலட்சத்திற்கு மேல் வெளிநாட்டவர் ஆவர்.
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]
- ஜெய்சல்மேர் கோட்டை மற்றும் கோட்டையில் உள்ள அரண்மனை மற்றும் சமணர் கோயில்கள் மற்றும் ஏரிகள்
- அரசு அருங்காட்சியகம், ஜெய்சல்மேர்
அணுகுண்டு வெடிப்புச் சோதனை
[தொகு]
இம்மாவட்டத்தின் பொக்ரானில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று சிரிக்கும் புத்தர் எனும் நடவடிக்கை மூலம் முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நிகழ்ந்தது. பின்னர் 1998-ஆம் ஆண்டில் மே 11, மற்றும் 13-ஆம் நாட்களில், இரண்டாம் முறையாக சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜெய்சல்மேர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23.7 (74.7) |
27.2 (81) |
32.8 (91) |
38.4 (101.1) |
41.7 (107.1) |
40.9 (105.6) |
37.8 (100) |
36.0 (96.8) |
36.5 (97.7) |
36.1 (97) |
31.1 (88) |
25.4 (77.7) |
33.97 (93.14) |
தாழ் சராசரி °C (°F) | 7.9 (46.2) |
10.9 (51.6) |
16.8 (62.2) |
22.2 (72) |
25.7 (78.3) |
27.1 (80.8) |
26.5 (79.7) |
25.4 (77.7) |
24.3 (75.7) |
20.5 (68.9) |
13.8 (56.8) |
8.9 (48) |
19.17 (66.5) |
பொழிவு mm (inches) | 1.3 (0.051) |
4.0 (0.157) |
3.2 (0.126) |
18.1 (0.713) |
9.2 (0.362) |
16.1 (0.634) |
56.1 (2.209) |
79.0 (3.11) |
16.2 (0.638) |
2.5 (0.098) |
1.3 (0.051) |
2.5 (0.098) |
209.5 (8.248) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) | 0.6 | 1.0 | 0.9 | 0.4 | 0.8 | 1.1 | 3.9 | 3.9 | 2.1 | 0.4 | 1.1 | 0.5 | 16.7 |
ஆதாரம்: WMO |
Sumaliyai village Jaisalmer Rajasthan.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
- ↑ District : Census 2011 data[தொடர்பிழந்த இணைப்பு]
- Official Website of Jaisalmer District பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்