ஒரு நாளைக்கு 300 கி.மீ தூரம் பயணிக்கும் அமெரிக்க அந்துப் பூச்சிகளால் மக்காச்சோள மகசூல் கடும் பாதிப்பு: படைப்புழு தாக்குதலால் பரிதவிக்கும் தமிழக விவசாயிகள்
- ️Thu Jan 01 1970
Published : 02 Feb 2019 08:44 AM
Last Updated : 02 Feb 2019 08:44 AM

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றி பல்வேறு நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வந்த படைப்புழுவின் தாய் அந்துப் பூச்சிகளால் தமிழகத்தில் மக்காச்சோளம்பயிரிட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்த அளவிலான தண்ணீர், செலவு, பராமரிப்பு மற்றும் அனைத்துவித மண்ணிலும் ஆண்டு முழுவதும் பயிரிடலாம், எளிதான சந்தைப்படுத்துதல் காரணங்களால் மக்காச்சோளத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
2.80 லட்சம் ஹெக்டேரில்
நிகழாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 61,594 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில் 31,279 ஹெக்டேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 24,500 ஹெக்டேர், விருதுநகர் மாவட்டத்தில் 23,217 ஹெக்டேர், கடலூர் மாவட்டத்தில் 21,561 ஹெக்டேர், அரியலூர் மாவட்டத்தில் 15,604 ஹெக்டேர் திருச்சி மாவட்டத்தில் 14,000 ஹெக்டேர் பரப்பளவிலும், இதர மாவட்டங்களில் 10,000 ஹெக்டேருக்கு குறையாமலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம்ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் தமிழக அளவில் ஆண்டுதோறும் முன்னிலையில் உள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆங்காங்கே பல்வேறுநிலையில் போராட்டம் நடத்தியதன் விளைவாக தமிழக அரசு அண்மையில் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
மானாவாரி மக்காச்சோளப் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410 எனவும், இறவைப் பாசனம் மூலம் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 எனவும் அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் அறிவிப்பால் வேதனை
இதுகுறித்து வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம் கூறியதாவது:படைப்புழு தாக்கியதால் மக்காச்சோளப் பயிரில் பலருக்கு 100 சதவீதமும் மகசூல் கிடைக்காமல் போனதையடுத்து அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். சிலருக்கு 80 முதல் 50 சதவீதம் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிட மிகக் குறைவாக கணக்கிட்டாலும் ரூ.50 ஆயிரம் ஆகும். இந்த செலவில் கால் பங்குகூட அரசு நிவாரணம் வழங்காதது வேதனையாக உள்ளது. என்றார்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இளவரசன் கூறியதாவது:படைப்புழு தாக்குதல் பாதிப்பு குறித்த கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதுவரை 152 கிராமங்களில் 61,463 ஹெக்டேரில் கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துவிடும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி அரசின் நிவாரணம் கிடைக்கும்.
படைப்புழுவின் தாய் அந்துப் பூச்சி அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தோன்றி பல்வேறு நாடுகள் வழியாக இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இந்த பூச்சி ஒரு நாளைக்கு சராசரியாக 300 கி.மீ தூரம் பயணிக்கக் கூடியது. இப்போது இலங்கைக்கும் போய்விட்டது. கோடை உழவு, விளக்குப் பொறி, பூச்சிக்கொல்லி ஆகிய முறைகளில் இப்பூச்சிப் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
மேலும், பயிர் சுழற்சிமுறை அல்லது கலப்பு முறையில் பயிரிடுதல் ஆகிய முறைகளை விவசாயிகள் பின்பற்றினால் பெருமளவு பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றலாம். விதைகளில் கோளாறு என்பது ஏற்புடையதல்ல. விதைகளில் கோளாறு இருந்தால் நோய்கள் வரலாம். விளைச்சல் பாதிக்கலாம். ஆனால், பூச்சி உற்பத்தியாக வாய்ப்பே இல்லை என்றார்.
ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் உள்ளது. வேளாண் துறையினர் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்காச்சோளம் சாகுபடி முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு விதைப்பதற்கே போதாது. அரசு அறிவித்த நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுப்பதுபோல உள்ளது. எனவே, இழப்பீட்டுத் தொகையை ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow