bbc.com

ஹெச்.ராஜாவுக்கு எதிராக கூண்டோடு ராஜிநாமா - சிவகங்கை பா.ஜ.கவில் வெடிக்கும் பூசல் - BBC News தமிழ்

  • ️https://www.facebook.com/bbcnews
  • ️Wed Jun 23 2021

ஹெச்.ராஜாவுக்கு எதிராக கூண்டோடு ராஜிநாமா - சிவகங்கை பா.ஜ.கவில் வெடிக்கும் பூசல்

ராஜா

  • எழுதியவர், ஆ. விஜயானந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 ஜூன் 2021

பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து, சிவங்கை மாவட்டத்தில் உள்ள பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனர். அங்கு தேர்தல் தோல்விக்கு, `தேர்தல் பணியில் அலட்சியம்', `நிதி மோசடி' எனப் பல காரணங்களை ஹெச்.ராஜா முன்வைத்துள்ளார். என்ன நடந்தது?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ஹெச்.ராஜா களமிறங்கினார். `அ.தி.மு.க கூட்டணி உள்பட பல்வேறு காரணங்களால் உறுதியாக வெற்றி பெறுவோம்' என ஹெச்.ராஜா நம்பினார். ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ராஜா. இந்நிலையில், `தேர்தல் தோல்விக்குக் காரணம் கட்சியின் நிர்வாகிகள் சிலர்தான்' என ஹெச்.ராஜா குற்றம்சுமத்தியதாகத் தகவல் வெளியானது. .

இதையடுத்து, காரைக்குடி நகர தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி ஒன்றியத் தலைவர் பிரபு ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதனால் மனவேதனையடைந்த சிவகங்கை மாவட்ட பா.ஜ.க தலைவர் செல்வராஜும் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் பரவியது. இதன் காரணமாக 90-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களுடைய பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்துள்ளனர்.

``என்ன நடக்கிறது சிவகங்கையில்?" என பா.ஜ.க மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``என்னுடைய பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் குரூப்புகளில் பதிவிட்டுள்ளேன். அதனை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், என்னுடைய ராஜிநாமா கடிதத்தை கமலாலயத்துக்கு இன்னும் அனுப்பவில்லை. அதனை அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு இரண்டொரு நாள்களில் விரிவாகப் பேச இருக்கிறேன்" என்றார்.

ராஜா

பட மூலாதாரம், H.RAJA

``காரைக்குடி நகர தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்?" என சந்திரனிடம் கேட்டதற்கு, ``நான் திடீரென ராஜிநாமா செய்யவில்லை. அவ்வாறு செய்வதற்குத் தூண்டப்பட்டேன். சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்தோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட, காரைக்குடியில் மட்டும் 8,000 வாக்குகளை கூடுதலாக வாங்கியுள்ளோம். தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்பதை ஹெச்.ராஜா சுயபரிசோதனை செய்யவில்லை. அதற்கு மாறாக, `தோல்விக்குக் காரணம் 3 மண்டல தலைவர்கள்தான்' எனக் கூறிவிட்டு அவர்களை நீக்குமாறு மாவட்டத் தலைவரிடம் கூறியுள்ளார். மாவட்ட தலைவர் அதனை ஏற்கவில்லை. ஏனென்றால் கட்சி நிர்வாகிகள் வேலை பார்த்தார்களா இல்லையா என்பது அவருக்குத் தெரியும்.

அதையும் மீறி தொடர்ந்து மாநில தலைமைக்கு ராஜா அழுத்தம் கொடுத்தார். அப்படியும் நீக்காவிட்டால் மாவட்ட தலைவரையும் நீக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை அவர் ஆடி வந்தார். இதன் காரணமாக, மாநில தலைவர் முருகனையும் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தையும் நேரில் சந்தித்து இங்குள்ள நிலைமைகளை மாவட்ட தலைவர் செல்வராஜ் எடுத்துக் கூறினார். ஆனாலும், 3 பேரையும் ராஜிநாமா செய்யுமாறு தலைமை கூறி விட்டதால், நாங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தோம்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜாவை தவிர வேறு யார் வேட்பாளராக நின்றிருந்தாலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கும். தேர்தலில் செலவுகளைப் பார்த்துக் கொள்ள நிதிக்குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழுவில் இருந்த 5 பேர் கைகளுக்குப் பணம் வராமல் அவரது உறவினர் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், நாங்கள் பணத்தைக் கையாடல் செய்ததாக வீண் பழியை ஹெச்.ராஜா சுமத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நம்மை ஏன் ஏற்கவில்லை என்பதை ஹெச்.ராஜா ஆராய வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 27 இடத்தில் இருந்த சிவகங்கையை இரண்டாவது இடத்துக்குக் கொண்டு வந்த பெருமை மாவட்டத் தலைவர் செல்வராஜுக்கு உண்டு. கடந்த 4 ஆண்டுகளாக காரைக்குடி நகரத்தில் மட்டும் ஒன்பதாயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். இந்த மாவட்டத்தில் உள்ள 200 நிர்வாகிகளும், மாநிலத் தலைமையின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் எடுக்கப் போகும் முடிவை ஒட்டியே எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்" என்றார்.

``தேர்தல் தோல்வி தொடர்பாக உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்களே?'' என ஹெச்.ராஜாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கையை எடுத்துள்ளது. அதனால் அவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :