ஆச்சி மனோரமா (36)
- ️dinamalar
பள்ளிப் படிப்பை படிக்காதவராக இருந்தபோதிலும், பிறருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற உயரிய பண்பு தெரிந்தவர், மனோரமா.
படத்தில் நடிக்கும்போது மட்டும் தான், அவரது குரல் உயர்ந்து ஒலிக்கும். அதேபோல, யாரிடம் பேசினாலும் தன்னை ஒரு அம்மாவாக நினைத்தே, பேசுவார். அந்த அளவிற்கு அன்பானவராக இருந்தவர், மனோரமா.
யாராவது கடிதம் எழுதினால், அவர்களுக்கு பதில் கடிதம் எழுதும் மரியாதை தெரிந்தவர். ரசிகர்களிடமிருந்து கடிதம் வந்தால், கண்டிப்பாக பதில் எழுதி அனுப்பி விடுவார். நிறைய கடிதங்கள் வர ஆரம்பித்தபோது, பிரத்யேகமாக, ஒரு ஆளை நியமித்து, பதில் எழுத செய்து, தானே கையெழுத்திட்டு அனுப்புவார்.
கே.பாலசந்தர், ஏ.வி.மெய்யப்ப செட்டியார், பி.நாகிரெட்டி மற்றும் எஸ்.எஸ்.வாசன் போன்றவர்களிடம், இப்படி பதில் எழுதும் மரியாதை இருந்தது. அது, மனோரமாவிடமும் இருந்தது.
கே.பாலசந்தரின், தாமரை நெஞ்சம் மற்றும் முக்தா சீனிவாசன் இயக்கிய, பொம்மலாட்டம் திரைப்படங்கள், மே, 1968ல், ஒரே நாளில் வெளியாயின. முதன் முதலாக சரோஜாதேவி, கே.பி.,யின் இயக்கத்தில் நடித்த படம், தாமரை நெஞ்சம். படத்தில் கமலா என்னும் கேரக்டரில், பிரமாதமாக நடித்திருந்தார்.
பொம்மலாட்டம் படத்தில், மனோரமா நன்றாக நடித்திருந்தார்.
அன்றைய நாட்களில் சினிமா பத்திரிகைகளில், முன்னணியில் இருந்தது, 'பேசும் படம்' மாத இதழ். அந்த இதழில், 'இம்மாத நட்சத்திரம்' என்ற தலைப்பில், அந்த மாதம் வெளியான படங்களில் சிறப்பாக நடித்த கதாநாயகன் அல்லது கதாநாயகியை பாராட்டி எழுதுவர்.
அந்த இதழில், மே மாதம் வெளியான படங்களின் வரிசையில், பொம்மலாட்டம் படத்தில் நடித்த மனோரமாவின் சிறப்பான நடிப்பை பற்றி விரிவாக எழுதி, அம்மாத சிறந்த நடிகையாக, மனோரமாவை தேர்வு செய்திருந்தது.
இந்நிலையில், சோ, அந்த இதழுக்கு, இதைப் பற்றி ஒரு மடல் எழுதினார். அதில், 'மனோரமா, இந்த மாத நட்சத்திரம் மட்டும் கிடையாது; அவர், இந்த தலைமுறையின் நட்சத்திரம்...' என்று குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாக, அந்நாளில், சினிமா விமர்சனங்களில் மனோரமா பற்றி பெரிதாக எதுவும் எழுத மாட்டார்கள். அதிலும், சோவே எழுதியிருந்தது, பத்திரிகை உலகை திகைப்பில் ஆழ்த்தியது.
மனோரமாவின் திறமையை முழுமையாக உணர்ந்தவர் சோ. பார் மகளே பார் என்ற படத்தில் தான் அறிமுகமானார், சோ. அவரோடு முதலில் ஜோடியாக நடித்தவர், மனோரமா.
சோவின், முகமது பின் துக்ளக் படத்தில், மனோரமாவிற்கு, முன்னாள் பாரத பிரதமர் இந்திராவின் வேடம் கொடுக்கப்பட்டது. அந்த படம், மத்திய அரசின் கெடுபிடிகளை தகர்த்து, திரையிடப்பட்டது. இப்படம், இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
சிவாஜி கணேசனுடன் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம், வடிவுக்கு வளைகாப்பு. இதன்பின், சிவாஜியோடு மனோரமாவின் நட்பு மிக உன்னதமானது என்றே சொல்ல வேண்டும்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில், 'ஜில் ஜில்' ரமாமணி கேரக்டரில் நடித்து, ஒரு கலக்கு கலக்கினார். இந்த படத்தில் மிகப் பிரமாதமாக நடித்ததை பாராட்டி, 'சிறந்த துணை நடிகை' என்னும் பட்டத்தை கொடுத்து, மனோரமாவை கவுரவப்படுத்தியது, தமிழக அரசு.
ரமாமணி கேரக்டரில் நடித்ததை பற்றி நிறைய பேசி உள்ளார், மனோரமா.
'பாலையா அண்ணனை பார்த்து, சிவாஜி சாரே பயப்படுவாங்க. அப்படிப்பட்ட மகா நடிகரான பாலையா அண்ணன், சிவாஜி, சாரங்கபாணி இவங்க கூடத்தான் எனக்கு முதல், 'ஷாட்!' நான், 'என்ன சிக்கலாரே சவுக்கியமா'ன்னு விசாரிக்கிற சீன்.
'அப்ப பாலையா அண்ணன் சொல்வாங்க, 'இவங்க ஆட்டத்துல பேர் போனவங்கன்னு...' அவங்களுக்கு முன்னால எனக்கு நடிக்கவே முடியல. பயமா இருக்கு, அழுகையா வருது. நான் தான் தொடர்ந்து வசனம் பேசணும்.
'சிவாஜிக்கு என்னை கவனிக்கிற, 'ஷாட்' மட்டுமே. நான், ஏ.பி.நாகராஜன் சாரை பார்க்கறேன். நடிப்பு வரல. அவர், என்னை கூப்பிட்டார். 'இந்த சீன்ல நீதான் பெரிய ஆள். அவங்கள மறந்துடு'ன்னு தைரியம் சொன்னாரு. அப்புறம் தான் கொஞ்சம் தைரியம் வந்திச்சு. படபடன்னு பேசி நடிச்சேன்.
'இப்பவும் நீங்க படத்தை பாத்தீங்கன்னா, அந்த சீன்ல, சிவாஜி வசனம் எதுவும் இல்லாம, 'சின்ன பொண்ணா இருந்தாலும், நல்லா ஆக்ட் பண்றா'ன்னு என் நடிப்பையே ரசிக்கிறது தெரியும்...' என்று நெகிழ்ச்சியோடு ஒருமுறை கூறினார், மனோரமா.
சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஏக்கம், மனோரமாவிற்கு இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்பு நீண்ட நாட்களாக கைகூடாமலே இருந்து வந்தது. ஞானப்பறவை படத்தின் வாயிலாக, அந்த ஏக்கம் தீர்ந்தது. இந்த வாய்ப்பை அளித்தவர், வியட்நாம் வீடு சுந்தரம்.
எம்.ஜி.ஆர்., படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயினை தவிர, வேறு யாருக்கும், 'டூயட்' சீனே இருக்காது. இந்த எழுதப்படாத விதி, மனோரமாவிற்காக தளர்த்தப்பட்டது.
எம்.ஜி.ஆர்., நடித்த, வேட்டைக்காரன் படத்தில், முதன் முதலாக, நாகேஷும், மனோரமாவும் சேர்ந்து, 'டூயட்' பாடி ஆடும் காட்சி வைக்கப்பட்டது. 'சீட்டுக்கட்டு ராஜா' என்ற பாடலை பாடி, இருவரும் அசத்தியிருப்பர். இந்த பாடல், 'சூப்பர் ஹிட்'டானது.
இதன்பின், 'தேவர் பிலிம்ஸ்' தயாரிக்கும் படங்களில் எல்லாம், எம்.ஜி.ஆர்., -ஜெயலலிதாவுடன், நாகேஷ், மனோரமா ஜோடி கண்டிப்பாக நடிக்க ஆரம்பித்தனர். இது, மனோரமாவின் திரைப்பட வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மேலும் அடித்தளமிட்டது.
மனோரமாவின் பேரன், ராஜராஜன். ராஜராஜ சோழ மன்னன் பிறந்த நட்சத்திரத்தில் பிறந்த காரணத்தால், அந்த பெயர் சூட்டப்பட்டது. மருத்துவ படிப்பை முடித்து, தற்போது டாக்டராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவியும் டாக்டர்.
அடுத்தது, மகன் பூபதிக்கு, அபிராமி என்ற மகள். திருமணமாகி விட்டது. கொள்ளுப் பேரனும் எடுத்து விட்டார் மனோரமா. அவன் பெயர், அத்வைத்ராம். அவன், பாட்டி மனோரமாவை, 'மனோ டார்லிங்' என்று அழைப்பதை பெருமையாக குறிப்பிடுவார்.
மூன்றாவது பேத்தி, மீனாட்சி. அவரும் ஒரு பட்டதாரி.
இப்படியாக அவரது குடும்பம், பட்டதாரி குடும்பமாக திகழ்ந்தபோதும், பூபதியின் நிலைமை அவரை தளரச் செய்து விட்டது.
மேலும், இவரது பேத்தி அபிராமி, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதாவது, 'என் பாட்டி மனோரமாவிற்கு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றன. பாட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டு சீரியஸாக உள்ளார்.
'தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாத நிலையில் இருக்கிறார். தந்தை பூபதி, மதுவிற்கு அடிமையாகி, சுயநினைவற்று இருக்கிறார்.
'இதை சாதகமாக்கி, என் அண்ணன், டாக்டர் ராஜராஜன், பாட்டியின் அசையாச் சொத்துக்களை தன் பெயருக்கு, போலியாக, பத்திரம் தயாரித்து, சொத்து முழுவதையும் அபகரித்துக் கொண்டார்.
'எனவே, பாட்டி மனோரமாவின் சொத்து மீது, ராஜராஜன் உரிமை கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும்...' என்று, மனு தாக்கல் செய்தார்.
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
- குன்றில்குமார்